search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த உசிலம்பட்டி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    உசிலம்பட்டி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் (வயது45) என்பவர் நேற்று 12-வது நபராக இறந்தார். இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டியை சேர்ந்தவர்.

    விவசாயம் செய்து வந்த ஜெயராமன், ஆரம்பத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பில் இருந்துள்ளார். பின்னர் மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினரான அவர், விவசாயிகளின் பிரச்சினை மற்றும் பொது பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.

    மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரங்களையும் வழங்கி வந்த ஜெயராமன், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்க மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகளுடன் சென்றார்.

    அங்கு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது போலீசார் துப்பாக்கி சூட்டில் தலையில் காயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெயராமன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    அவருக்கு பாலம்மாள் என்ற மனைவியும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். கருமாத்தூரில் உள்ள கல்லூரியில் நந்தினி இந்த ஆண்டுதான் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கடலூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் மற்றும் போராட்டம் நடந்து வருகிறது.

    கடலூரில் இன்று மாவட்ட தி.மு.க. மீனவர் அணி சார்பில் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் குணசேகரன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர் அணி நிர்வாகிகள் பழனிவேல், விஜயேந்திரன், தேவநாதன், பார்த்தீபன், மாணவர் அணி அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேப்போல் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கடலூரில் வாலிபர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 27). எம்.சி.ஏ. பட்டதாரி.இவர் இன்று கடலூர் மஞ்சகுப்பம் அம்பேத்கார் சிலை முன்பு கருப்பு கொடி ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த புதுநகர் போலீசார் அங்கு வந்தனர். அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அன்புராஜை கைது செய்தனர்.

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வடலூர் பஸ் நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் புதுமாப்பிள்ளை இறந்த தகவல் அறிந்த அவரது இளம்மனைவி கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று பொது மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் பலியானார்கள். இதனால் தூத்துக்குடி நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்த மணிராஜூம் (வயது 25) ஒருவர். இவர் தொடக்கத்தில் இருந்தே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று வந்தார்.

    இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. நேற்று நடந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க அவர் காலையிலேயே வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார். துப்பாக்கி சூட்டில் அவர் பலியானது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    புதுமாப்பிள்ளை மணிராஜ் இறந்த தகவல் அறிந்த அவரது இளம் மனைவி கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. வாழ்க்கையை தொடங்கிய 3 மாதத்திலேயே மணிராஜின் வாழ்வு முடிந்துபோனது.
    துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு நடத்த போவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இந்த போராட் டத்துக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு போட்டது.

    தடையை மீறி பொதுமக்கள் பேரணியாக சென்றபோது கலவரம் வெடித்தது. இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் உண்டானது.

    இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் பலியானார்கள். ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று தூத்துக்குடியில் வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு நடத்த போவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவர் விநாயகமூர்த்தி, பொதுச்செயலாளர் பாஸ்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு த‌குந்த நியாயம் கிடைக்கும் வரை தூத்துக்குடியில் காலவரையற்ற முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது” என்று தெரிவித்திருந்தனர்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி நகர் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

    தூத்துக்குடியை சுற்றியுள்ள புதுக்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், முள்ளக்காடு, முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகளும், சில பெட்டிக்கடைகளும் மட்டுமே திறந்திருந்தன.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி அறவழியில் போராட்டம் நடத்தியவர்களை காட்டுமிராண்டித்தனமாக போலீசார் சுட்டுக்கொன்றது கண்டிக்கத்தக்கது என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறினார். #SterliteProtest #Vaiko
    தூத்துக்குடி:

    துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி அறவழியில் போராட்டம் நடத்தியவர்களை காட்டுமிராண்டித்தனமாக சுட்டு கொன்றுள்ளார்கள். 50 ஆயிரம் மக்கள் எந்த ஆயுதமும் இன்றி அறவழியில் திரண்டு வந்தார்கள்.

    அவர்களை வேன்களில் ஏறி நின்றும், கட்டிடங்களில் மறைந்து நின்றும் போலீசார் சுட்டுக்கொன்றுள்ளார்கள். சீருடை அணியாத போலீசார் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி 22 வருடமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மகராஷ்டிராவில் 3 நாள் போராட்டத்திலேயே இந்த கம்பெனியை அரசு இழுத்து மூடியது. அங்கு எந்த போலீஸ் நடவடிக்கையும் இல்லை.

    இங்குதான் போலீசாரால் வன்முறை நடத்தப்பட்டுள்ளது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். துப்பாக்கி சூட்டில் பள்ளி மாணவி கொல்லப்பட்டுள்ளார். வேலைக்கு சென்றவர் பலியாகி உள்ளார். இந்த சம்பவத்துக்கு மன்னிப்பே கிடையாது. துப்பாக்கி சூடு சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு இழப்பீடு தீர்வாகாது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதுதான் தீர்வு.

    இவ்வாறு அவர் கூறினார்.



    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை இன்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து கண்ணீர் விட்டு அழுது ஆறுதல் கூறினார். அப்போது வார்டுகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து நடந்த விவரங்களையும் கேட்டறிந்தார். அங்கு நின்ற டாக்டர்களிடம் தரமான சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார்.  #SterliteProtest #Vaiko

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பா.ஜ.க.தான் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #SterliteProtest #ChidambaramAttackBJP
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல்துறையின் இந்த அடக்குமுறைக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுத்ததால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பா.ஜ.க. கடுமையாக சாடியுள்ளார்.

    தூத்துக்குடி பெருந்துயரத்திற்கு யார் காரணம்? சிந்தனையும் செயலும் இழந்த மாநில அரசு. சீரிய தலைமையும் போதிய பயிற்சியும் இல்லாத காவல் துறை. காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக. தமிழ் நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா? என சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

    மேலும், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறியுள்ளார். #SterliteProtest #ThoothukudiFiring #ChidambaramAttackBJP
    தூத்துக்குடியில் இன்று நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் வெடித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில் போராட்டக்காரர்கள் ஒரு குழுவினர் பேரணியாகப் புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின் கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

    இதற்கிடையே மற்றொரு குழுவினர் தொடர்ந்து முன்னேறி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். போலீசாரின் தடுப்பையும் மீறிச் சென்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  அப்போதும் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலக வாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். டயர்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் எழுந்தது.



    ஏராளமானோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. எனவே, கூட்டத்தைக் கலைக்க, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிசூடும் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் பலர் காயமடைந்திருக்கலாம் என தெரிகிறது.

    போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்குழுவினர் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை தடை செய்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுகிறது. மதுரை, விருது நகர் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 2000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.  #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர்.



    விவிடி சிக்னல் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். பேரிகார்டுகள் அமைத்தும் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக் குழுவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனம் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். போலீஸ் வாகனத்தையும் கவிழ்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின் கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

    இதேபோல் போராட்டக்குழுவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களை ஆதரித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், புதியம்மபுத்தூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடியில் மினிபஸ்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் இன்று இயக்கப்படவில்லை.  #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite 
    ×